Monday, December 27, 2010

493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12

திருப்பாவை பன்னிரண்டாம் பாடல்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?

கேதார கெளள ராகம் , ஆதிதாளம்

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

பொருளுரை:

பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!

பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?

பாசுரச் சிறப்பு:


கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்! 'கன்றுக்கு பசிக்குமே' என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், அவ்விலத்து எருமைகள் கறக்காமலேயே பாலைச் சுரக்கத் தொடங்கினவாம். தன் குழந்தைக்குப் பசி என்பதை ஒரு தாய் அது அழுவதற்கு முன்னமே புரிந்து கொள்கிறாள் இல்லையா! "சாப்பிட்டு விட்டு எந்த வேலை இருந்தாலும் பாரேன்" என்ற அன்னையின் குரல் கேட்காத வீடும் இருக்கிறதா என்ன!

'நனைத்தில்லம் சேறாக்கும்' - அந்த வீட்டில் அத்தனை கறவைகள் இருந்தன. கன்றை எண்ணி (உண்டு செழித்திருந்த) எருமைகள் பாலைச் சுரந்தாலும் கன்றுகள் தான் எவ்வளவு குடிக்க முடியும்! அவை குடித்த பின்னும் சுரந்து கொண்டேயிருந்த பாலானது, தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து வீடே சேறாகி விட்டதாம். அவ்வீட்டின் செல்வச் செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.

முந்தைய (கற்றுக் கறவை கணங்கள் பல) பாசுரத்தில், உறங்கும் பெண்ணின் தந்தையை முன்னிருத்தி (கோவலர் தம் பொற்கொடியே), ஆண்டாள் அவளை துயிலெழுப்பினாள். இப்பாசுரத்தில் உறங்கும் கோபியர் குலப் பெண்ணை, அவளது அண்ணனை முன்னிருத்தி (நற்செல்வன் தங்காய்!) ஆண்டாள் எழுப்புகிறாள். இந்த அண்ணனானவன், கண்ணனுக்கு மிக நெருக்கமானவன். அதனாலேயே அவனுக்கு நற்செல்வன் என்ற சிறப்பு தரப்பட்டது!

ஆனால், அவன் தன் தினக் கடமையான பால் கறத்தலை செய்யாததால் தானே, சுரந்த பாலால் வீடே சேறானது. பின் அவன் எப்படி "நற்செல்வன்" ஆனான்? கோதை நாச்சியார் சொல்ல வருவதை புரிந்து கொண்டால், அதற்கும் சரியான பதில் கிடைத்து விடுகிறது!


நற்செல்வன் என்பதற்கு ஞானத்தையும், பிரம்மானுபவத்தையும், பகவத் கைங்கர்யத்தையும் செல்வங்களாகக் கிடைக்கப் பெற்றவன் என்று பொருளாம். அவன் அன்று கண்ணனுக்கு சேவை (பகவத் கைங்கர்யம்) செய்ய புறப்பட்டுச் சென்று விட்டதால், அவனது நித்ய கடமையை(பால் கறப்பது) செய்ய இயலாமல் போனது. அதனாலேயே, எருமைகளின் முலைக்காம்புகளிலிருந்து பால் சுரந்து இல்லமெங்கும் ஈரமாகிப் போனது !! அப்பேர்ப்பட்ட அண்ணனின் தங்கையான (நற்செல்வன் தங்காய்) இவளும் ஓர் உத்தம அதிகாரியே.

இலக்குமணன், தன் தாய் சுமித்திரையின் கட்டளையை ஏற்று, ராமபிரான், சீதையுடன் வனம் சென்று, அவர்களுக்குத் தொண்டாற்றிய படியால், தன் குடும்ப வாழ்வின் கடமையை செய்யத் தவறியது போல தோன்றினாலும், அவன் குற்றம் புரிந்தவன் ஆக மாட்டான். அதாவது, பகவத்-பாகவத சேவை, நித்ய சேவையைக் காட்டிலும் முக்கியமானது என்பது இதிலிருந்து கிடைக்கும் செய்தியாம். சில நேரங்களில், சாதாரண சேவைகளை விடவும் அசாதாரண சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன தானே!

சில பூர்வாச்சார்யர்கள், கன்றுக்காக இரங்கி பாலைச் சுரக்கும் எருமையை, அன்பே வடிவான திருமகள் உருவகமாகவும், செல்வத்தின் அதிபதியான திருமகளை பரமன் தன்னிடத்தில் கொண்டதால், நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்! ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை (ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

"நற்செல்வன் தங்காய்" என்று வருகிறதே என்ற ஐயம் எழலாம்! மேற்சொன்ன வகையில் இப்பாசுரத்தை நோக்கும்போது, திருமகள் "ஹிரண்மயி" என்பதால் தங்கை என்ற பதத்தை "தங்கம்" என்று கொள்ள வேண்டும்.

அக்கோபியின் அண்ணன், ஸ்ரீகிருஷ்ணனின் அந்தரங்க தாசன், அதாவது, ஸ்ரீராமனுக்கு இளையபெருமாள் போல. அதனாலும், சக்ரவர்த்தித் திருமகன் பெண்களை ஒருபோதும் வருத்தாமையாலும், இப்பாசுரத்தில் ஸ்ரீராமபிரானின் சிறப்பு சொல்லப்பட்டது. ராம(ரிடம்) சரணாகதியைக் கொண்டாடும் பாசுரமாகவும் இதைப் பார்க்க முடிகிறது!

மேலும், "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை" என்று 5 வார்த்தகளில் ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி! ஸ்ரீராமன் என்ற உத்தம மகாபுருஷனுக்கு கோபம் உண்டு, ஆனால் வெறுப்பு கிடையாது.

தன் மனத்துக்கினிய சீதையை கவர்ந்து சென்றதால் தானே, (கோபமே வராத) ஸ்ரீராமனுக்கு சினம் உண்டாகி, இராவணனை வதம் செய்ய நேர்ந்தது. சரி, ராமன் எப்படி "மனத்துக்கினியான்" ஆகிறான்? அவன் ஏகபத்தினி விரதன் ஆன காரணத்தாலே! எல்லா நற்குணங்களைக் காட்டிலும், ஒரு கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பதே, அவன் மனைவிக்கு உவகை தரும்.

ஓர் ஆண்மகனுக்கு பெருமை சேர்க்கும் குணநலனாக அது கருதப்படுகிறது! அதனால், ராமபிரானை மனத்துக்கினியானாக நாச்சியார் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ராமனை "புண்ணியன்" என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்) போற்றியதை நினைவு கூர வேண்டும்.

"அனைத்தில்லத்தாரும் அறிந்து" எனும்போது, ஆய்ப்பாடியிலுள்ள அத்தனைப் பெண்டிரும் உறங்கும் இந்த ஒருத்தியை எழுப்புவதற்காக அவள் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பது குறிப்பில் உணர்த்தப்பட்டது!


மேலும், சென்ற பாசுரத்தில் ஆயர்கள் பால் கறந்ததாகச் (கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து) சொன்னபோது, கர்மயோகத்தின் அவசியம் குறிப்பில் உணர்த்தப்பட்டதாகவும், இப்பாசுரத்தில் (நற்செல்வன் திருச்சேவையில் இருந்தபடியால்!) பால் கறக்காமை விவரிக்கப்படுவதை கர்மயோகத்தைக் காட்டிலும் பகவத் / பாகவத சேவையின் உயர்வைச் சொல்வதாகவும், எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அன்னங்கராச்சார் சுவாமிகள் கூறுவார்.

அடுத்து, கோதை நாச்சியார் விவரிக்கும் ரம்யமான காட்சியைப் பாருங்கள். மேலே, பனிமழை பொழிந்து வெள்ளமிட்டு தலை நனைக்க, கீழே பால் பெருகி வெள்ளமிட்டு கால் நனைக்க, இவை நடுவில் திருமாலினிடத்து (கண்ணபிரான்) பெருங்காதல் வெள்ளமிட்டு மனதை நனைக்க, அந்த உத்தம பாகவதையின் வீட்டு வாசலே கதியென்று வந்து, எம்பெருமானை போற்றிப் பாடி, தங்கள் உய்வுக்கு வேண்டி அவளை துயிலெழுப்புகிறது ஒரு கோபியர் கூட்டம்!!!

பாசுர உள்ளுரை:

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
- இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பனித்தலை வீழ - அஞ்ஞானமிக்க (நாங்கள்)

நின் வாசற்கடை பற்றி - "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு

தென்னிலங்கைக் கோமானைச் செற்ற - கட்டுப்பாடற்ற புலன்சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல

மனத்துக்கினியானை - கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் "கண்ணுக்கினியவன்" ஆவான் :) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

ஈதென்ன பேருறக்கம் - நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?

அனைத்தில்லத்தாரும் அறிந்து - பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு, அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!
**************************************

இது பொய்கை ஆழ்வாரை துயிலெழுப்பும் பாசுரம் என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்:

"நற்செல்வன் தங்காய்" என்ற பதம் பொய்கையாருக்குப் பொருந்தும். குளத்தில் இருந்த தாமரை மலரில் (திருமகளைப் போலவே!) இவர் தோன்றியவர். அதனால், திருமகளின் தங்கை என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார்.

"பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று இவ்வாழ்வாரே தன் நிலை குறித்து பாடியிருக்கிறார் ஒரு பாசுரத்தில் ! அப்படி அவரது கண்ணீரும், அவர் பிறந்த இடத்தின் (பொய்கை) தன்மையும் சேர்ந்து, பொய்கையாரின் இல்லம் "நனைத்து இல்லம் சேறாக்கும்" என்ற உவமானத்துக்கு பொருத்தமாக வருகிறது தானே :)

ஒருவர் பேச/பாடத் தொடங்குமுன் தொண்டையை செருமுவது (கனைத்து!) வழக்கம் தானே! அதனால், "கனைத்து" என்பது முதல் 3 ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாருக்கு மிகப் பொருத்தமே, அதாவது இவருக்கு முன் எந்த ஆழ்வாரும் பாசுரங்கள் பாடவில்லையே!

இளம் கற்றெருமை கன்று - ஏற்கனவே சொன்னபடி, பொய்கையார் என்ற (ஆழ்வார்களில்) முதல் ஆச்சார்யனை கற்றெருமை உருவகப்படுத்துகிறது. கன்று என்ற பதம் அவருக்குப் பின்னாலும் ஆழ்வார்கள் உள்ளனர் என்பதை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

கன்றுக்கிரங்கி - அடியவர்களான நம் மேல் கருணை கொண்டு, பொய்கையார் தனது திருவந்தாதியை நமக்கு அருளினார்!

இனிதான் எழுந்திராய் - " "பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று விம்மிய நீரே இப்படி உறங்கலாமா?" என்று கோதை நாச்சியார் பொய்கையாரை கேள்வி கேட்கிறார். எதற்கு ? துயில் நீங்கி வந்து, ஆண்டாளுக்கும், கோபியர்களுக்கும் (அடியவர்களுக்கு) ஞானோபதேசம் செய்து உய்வுக்கு வழி காட்டுவதற்காக!

அனைத்தில்லத்தாரும் அறிந்து - ஆண்டாள் பாடியது பொய்கையாரின் "அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்" என்ற பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!

இப்பாசுரத்தின் முடிவில், கோதை நாச்சியார், தன்னிலும் மூத்தவரான அனைத்து ஆழ்வார்களையும் துயிலெழுப்பி விடுவதாக, இது குறிப்பில் உணர்த்துவதாம். அதாவது, ஆழ்வார் திருக்கோஷ்டியில் உள்ள மதுரகவியாரையும், ஆண்டாளையுமே சேர்த்துத் தான்!

இதில் மதுரகவியார் எப்படி வருகிறார்? "நற்செல்வன் தங்காய்" என்பதை "நற்செல்வன் தன் கையே" என்று கொள்ளும்போது, நற்செல்வன் என்பது திருவாய்மொழி அருளிய குருகூர் பிரான் ஆன நம்மாழ்வரை குறிப்பதாக உள்ளர்த்தம். அப்படிப் பார்க்கும்போது, அவருக்கு "கையாக" இருந்து நம்மாழ்வாரின் திருப்பாசுரங்களை பதிவு செய்த மதுரகவி ஆழ்வாரை, "நற்செல்வன் தங்காய்" குறிப்பில் உணர்த்துவதாக சொல்லலாம் தானே !

மேலும், எம்பெருமானாரை (எந்தை ராமானுச முனி) நற்செல்வனாகக் கொண்டால், "நற்செல்வன் தங்காய்" என்பது ஆண்டாளையே குறிப்பில் உணர்த்துவதாகிறது!

"கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய்" என்பதையும், "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" என்பதையும் நினை கூர வேண்டும்!

இறுதியாக, இந்த ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்பதை கோதையாரின் திவ்யப் பாசுரங்களை சுவைப்பதற்கான ஆனந்த அனுபவமாக பார்க்க வேண்டும். அப்போது ஆண்டாள் தன்னையே துயிலெழுப்பிக் கொள்ள முடியுமா போன்ற கேள்விகள் எழாது..

என்றென்றும் அன்புடன்
பாலா

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)

உயிரோடை said...

//சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை" என்று 5 வார்த்தகளில் ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி!// ஆஹா.

//கோதை நாச்சியார் விவரிக்கும் ரம்யமான காட்சியைப் பாருங்கள்.// பின் வ‌ரும் காட்சி விள‌க்க‌ம் அழ‌கு


மனத்துக்கினியானை கண்ணுக்கினியவன் எப்ப‌டி பொருத்துகின்றீர்க‌ள். ம்ம்ம்


//நற்செல்வன் தங்காய்" என்பதை "நற்செல்வன் தன் கையே" என்று கொள்ளும்போது// அருமை அருமை. பாலா நிங்க‌ள் சேவை தொட‌ர‌ட்டும். நெக‌ழ்வோடு காத்திருக்கின்றோம். வாழ்த்துக‌ள்.

ஆண்டாள் அர‌ங்க‌ன் திருவ‌டி ச‌ர‌ண‌ம்

Dr.N.Kannan said...

வாழ்த்துக்கள்! திருப்பாவைக்குத் தொடர்புடைய சுட்டிகள் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாசுரவரிசையச் சேர்க்க இயலுமா? திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் அரிய திருப்பாவை உபன்யாசம் ஒலி வடிவில் அங்கு கேட்கக்கிடைக்கிறது!

http://news-thf.blogspot.com/

கர்நாடகம் போல் தோன்றினாலும், இட்டு நிரப்ப விஷ்யம் இல்லாதோர் செய்யும் வேலை என்பது போல் தோற்றமளித்தாலும், இச்சேவையை விட்டு விடாதீர்கள். இறைவன் என்பவன் வேறெங்கும் இல்லை, அவன் இருக்குமிடம் இப்பனுவல்களிலேதான் என்று நம்மாழ்வார் சொல்லிப்போயுள்ளார். (உளன்! சுடர்மிகு சுருதியுள்!!). எனவே காணும் திறனுற்றோருக்கு காட்சிப் படுத்த இவ்வாசக கைங்கர்யம் மிக அவசியம். கோதையின் எழுச்சி கீதங்கள் இதையே உணர்த்துகின்றன! நன்றி.

ரவி said...

காப்பிரைட் மெசேஜ் போடுங்க...பதிப்பகத்தார் எடுத்து புக்கா போட்டுட போறாங்க

enRenRum-anbudan.BALA said...

மின்னல்,
நன்றி.

கண்ணன் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செ.ரவி,
நன்றி. நீங்கள் சொன்னபடி காப்பிரைட் மெஸேஜ் ஒன்று போட்டு விட்டேன் !

ரவி said...

வெரிகுட் !!!

குமரன் (Kumaran) said...

பாசுரத்தின் பொருளை மிக அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் பாலா. கோதைத் தமிழ் பதிவில் திருப்பாவை விளக்கங்கள் எழுதும் போது நீங்கள் இங்கே எழுதியுள்ளவற்றிலிருந்தும் எடுத்து விரித்து எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.

கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய் - இது யாருடைய பாடல்/சொல்/கருத்து?

enRenRum-anbudan.BALA said...

ஜூனியர்,
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

//கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய் - இது யாருடைய பாடல்/சொல்/கருத்து?
//
என் திருப்பாவைப் பதிவுகளில் வரும் சிலபல விஷயங்கள், வாசிப்பிலிருந்து எழுதியவை, சிலபல கேள்வி ஞானத்தில் எழுதியவை. இதைச் சொன்னது மணவாளமாமுனியா அல்லது தேசிகரா என்று சரியாகத் தெரியவில்லை. பொறுத்தருள்க :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Republished this after adding more info and pics.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..ப்ரமாதம் ..இத்தனை நாள் இதனை எப்படி விட்டேன் என்று தெரியவில்லையே..அந்த படங்கள்..அருமை.....


அன்புடன்,
ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி
http://keerthananjali.blogspot.com/search?updated-max=2010-11-11T06:50:00-08:00&max-results=7

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails